விடையேறும் எங்கள் பரமன்
சடைவார்குழல் நதியோடொரு மதிசூடிய பெருமான்
கொடியாமிடை உடையாள்உமை ஒருபோதிலும் பிரியான்
தடையாவையும் பொடியாய்விழ உடனேஅருள் புரிவான்
விடைவாகனன் பதமேகதி எனநாடுக மனமே!
பனிவார்சடை அரவோடொரு பிறைசூடிய பெருமான்
கனிவாய்மொழி கருணாகரி கணமேயினும் பிரியான்
இனியோரிடர் தொடராவணம் இனிதேயருள் புரிவான்
விடைவாகனன் பதமேகதி எனநாடுக மனமே!
முகிலோடிய சடைமீதினில் நிலவோடிய பெருமான்
துகில்மூடிய நகிலாள்உமை துணையோர்கணம் பிரியான்
புகல்நாடிய அடியாரிடர் கெடவேஅருள் புரிவான்
விடைவாகனன் பதமேகதி எனநாடுக மனமே!
புகைபோல்படர் சடைமீதினில் புனல்சூடிய பெருமான்
முகைபோலிரு முலையாள்உமை முகமோர்கணம் பிரியான்
பகை, நோய்,பிணி அணுகாவணம் பதமாயருள் புரிவான்
விடைவாகனன் பதமேகதி எனநாடுக மனமே!
மலர்சூடிய சடைமீதினில் மதிசூடிய பெருமான்
லலிதாம்பிகை உமையாள்இடம் ஒருவேளையும் பிரியான்
கலியாம்விதி தொடராவணம் கடிதேயருள் புரிவான்
விடைவாகனன் பதமேகதி எனநாடுக மனமே!
சு.ரவி
Labels: ART and KAVITHAI
0 Comments:
Post a Comment
<< Home