திரு.பஞ்சாபகேசன் ( அப்பா)
அப்பா (12/3/2010)
அப்பா இப்போது ஃபோட்டோவில் மட்டும்!
முப்பது ஆண்டுகளுக்கு முன், வசந்தியை மடியிருத்தி, எனக்குத் தாரை வார்த்துக் கன்னிகாதானம் செய்து கொடுத்த அன்று முதல் எனக்கும் அப்பா ஆனவர் அமரர் ஆகிவிட்டார்.
புதுக்கோட்டையில் துவங்கிய பயணம் புனேயில் முடிந்துவிட்டது.
"நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு."
வள்ளுவர் யாக்கை நிலையாமை பற்றித் தெளிவாகச் சொன்னாலும், 'நாம் சாஸ்வதம்' எனும் நினைப்பு நமக்கு!
யக்ஷப் ப்ரஸ்னத்தில் தருமன் பதில்தான் பொட்டில் அடித்தாற்போல் தெறிக்கிறது!
வியாழக் கிழமை இரவு விருந்தினர்களோடு சிரித்துக் கொண்டிருந்தவர், வெள்ளிக்கிழமை மதியம் பேத்தி பாரதி பறிமாற உணவருந்தி, உரையாடியவர், அடுத்த இரண்டு மணிகளில் இல்லை
-என்ற அதிர்ச்சியிலிருந்து மீளக் கூட முடியவில்லை.
எண்பது வயது கடந்தாலும், நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்த தன் வாழ்க்கை முறைகளால் மனத்தளவில் இருபது வயது இளைஞராக வளைய வந்தவர்;
காலையில் மேலசட்டை இன்றி, வேட்டிகட்டி,
நெற்றிநிறைந்த விபூதியும், துளசி, ருத்ராக்ஷ மாலைகளுமாக இருப்பவர் மாலையில் ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட்,
ஸ்போர்ட்ஸ் ஷூ, கூலிங் கிளாஸ் சகிதமாக்ப் புறப்படுவார்.
மூலவருக்கும் உற்சவருக்கும் எத்தனை வேறுபாடு!
" எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து".
திட்டமிட்ட வாழ்க்கை, வரவுக்குள் செலவென்ற ஒரே தாரக மந்திரம், வீட்டு நிர்வாகப் பொறுப்பை முழுமையாகத் தானே சுமந்த தலைமைப் பண்பு, தளராத் சிவபக்தி, இளமையிலேயே டயபெடிஸ், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டும், மனம் தளராமல் போராடி, இறுதிவரை மிகக்கண்டிப்புடன் தன் உடல்நலம் பேணுவதில் தவறாமை, எல்லாவயதினரோடும் எவ்வளவு நேரமும் அலுப்பு தட்டாமல் உரையாடும் திறமை, புதியவர்களிடமும் வலியச்சென்று நட்பு பூணும் வேட்கை,
சங்கீதம், முதலாக நுண்கலைகளில் ரசனை, எழுபது வயதிலும்,. அமெரிக்காவில் இருக்கும் பேரனுடன் தொடர்பு கொள்ள
கம்ப்யூட்டரில் ஈ-மெயில் கற்றுக் கொண்ட விழைவு, புதிய எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக் கருவிகளில் ஆர்வம்,
அப்பா ஒரு சுவாரஸ்யமான குணசித்திரம்...
வானம் பொத்துக் கொண்டு மழை பொழிந்த அந்த மாலை நேரத்தில், திக்குத் தெரியாமல் நின்றிருந்த போது,
சுமார் பத்து மணிநேரம் தோளோடு தோள் நின்று, உத்விகள் செய்த எதிர் வீட்டு இளைஞர்கள் பீயூஷ், தினேஷ்,
உடனிருந்து உதவிய அலுவலக நண்பர்கள் அதுல், கிரண், பாலாஜி, HR department officer இனாம்தார், ambulance, Hospital.
Police என எல்லாத்துறையினரோடும் coordinate செய்து ஆகவேண்டிய காரியங்களை விரைவில் முடித்துத் தந்த்
அலுவலகத் துணை ஊழியர் பாண்டு. வீட்டில் அனைவருக்கும் எல்லா வேளைகளுக்கும் டீ, காஃபிமற்றும் உணவு
தயாரித்துக் கொடுத்த முகம் தெரியாத அண்டை வீட்டுக்காரர்கள்…. "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என உணர்த்திய
தருணங்கள் அவை...
இதோ, ஆயிற்று.
திங்கட்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து பாபு வந்ததும், அப்பாவின் பூத உடலின் இறுதிப் பயணம் முடிந்து, தகனத்திற்குப் பின் துலாப்பூர் திரிவேணி சங்கமத்தின் ச்ங்கமேஸ்வரர் ச்ன்னிதிக்கு எதிரில் அஸ்தியும்
கரைக்கப் பட்டு இரண்டுதினங்கள் ஓடிவிட்டன.
வந்த உறவுஜனங்கள் ஒவ்வொருவராகத் திரும்பிச்சென்று விட்டபின்,துயரங்களும், வேதனைகளும் படிப்படியாகக் குறைந்து அவற்றின் தழும்புகள் மட்டும் மீதமிருக்கின்றன.. மணல்வெளியில் பதிந்த காலடிச் சுவடுகள் போல, மனவெளியில் பதிந்துவிட்ட சோகச் சுவடுகள்.
சமையலறை மீண்டும் சுறுசுறுப்பாகிறது.
"ஆடிக் களைத்தான், சாப்பிட்டான்; அழுது களைத்தான் சாப்பிட்டான்" என்கிறது அவேரிய மலைஜாதியினரது பழமொழி.
பழமொழிகள் யதார்த்தத்தைப் புரியவைக்கும் வேத வாக்கியங்கள்!
" இருந்து சென்ற முன்னோரின்
இடத்திலெல்லாம் நாமின்று
விருந்து செய்து வாழ்கின்றோம்
விகடம் சொல்லி மகிழ்கின்றோம்
இருந்த இடம் விட்டு யாமும் இனி
எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார் யாரோ?
விகடம் சொல்வார் யார் யாரோ?"
ரவி