திருவரங்கத்து மரகதம்
வீடணன் விட்டுச் சென்ற
விலையிலாப் பொக்கிஷத்தை,
பாடலால் ஆழ்வாரெல்லம்
பரவிய பசுமைக் குன்றை
நீடுயர் மதில்சுழ் கோயில்
நிலைத்தருள் மரகதத்தைக்
கோடுலாம் ஓவியத்தில்
கொணர்ந்திடக் கூடுமாமோ?
பையரா அணையாய்க் கொண்டு
பைந்துழாய் மாலை சூடி
மையலால் ஆழ்வார் வாக்கில்
மயங்கியே கிடக்கும் மாலை
செய்களசூழ் அரங்கக் கோயில்
சேர்ந்தருள் மரகதத்தைக்
கையினால் வரையும் கோட்டில்
காட்டுதல் சாத்யம் ஆமோ?
நடையிலே ஏறாய், சிந்தும்
நகையிலே நிலவாய், ஆங்கே
இடையறா அமுதாய் ஆழ்வார்
இசைத்தமிழ் பருகும் மாலை,
உடையவர் முறைசெய் கோயில்
உவந்தருள் மரகதத்தைக்
கடையவன் கருப்பு வெள்ளைக்
கோட்டிலே காட்டப் போமோ?
காவிரி சூழச் செல்லும்
கவின்மிகும் தீவுக்குள்ளே
ஆவலோ(டு) அரையர் சேவை
அனுபவித் திருக்கும் மாலை
காவியம் கண்ட கோயில்
கண்வளர் மரகதத்தை
ஓவியக் கோட்டுக் குள்ளே
ஒருவனால் தீட்டப் போமோ?
களிதரும் தமிழ்வே தத்தைக்
கணந்தொறும் பருகும் மாலை
ஒளியுற உயர்ந்த கோயில்
உள்ளுறும் மரகதத்தை
உளியினால் செய்யும் சிற்பம்
ஊசியால் முனைந்தாற் போலே
எளியவன் வரைந்து பார்த்தேன்!
என்தின9வு) அடக்கப் போமோ?
சு.ரவி
0 Comments:
Post a Comment
<< Home