SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Saturday, June 30, 2012

அம்மா


அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், 'கண் பார்த்தால் கைசெய்யும்' என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்- ஓர் அபூர்வக் கலவை அம்மா!.
பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ 'குறைவொன்றும் இல்லை கோவிந்தா' தான்!  
தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக
அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.
உழைப்புக்கு அஞ்சாத அம்மா!
தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து- தன் நேரத்தை வீணாக்காத அம்மா!
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை சுமதி (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த செயல்வீராங்கனை அம்மா!
எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா! மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின்
முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!
வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, இந்திராநகரில் ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!
1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனர் திரு.முத்தையனைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!
1973 ஆம் வருடம்பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது,
எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!
தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத் அம்மா! 
தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!
நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப் பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!
கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸ்ர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!  
நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
"Don’t Touch me; self Help is the Best Help"என்று சொல்லி அசத்திய அம்மா!
"என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!
அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!
அம்மா,
சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள்
வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-
இன்றைக்கு….?

Labels:

Saturday, June 18, 2011

மஹாபெரியவாள்












ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம்,
நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய
பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

"ஜகத்குரு" என்ற அடைமொழிக்கு, " இந்த ஜகமே எனக்கு குரு" என்று விளக்கமளித்த எளிமை.

பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத்
திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷ்த்துக்களும், புராணங்களும் சொல்லியதை விட
அற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக்
கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய மேன்மை;

இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து
இந்துமதத்தின் உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது
விஜயங்களின் போது "மேனா" வின் பின் நடந்து செல்லும் காட்சி

 ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி
பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம்.
தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது.
 கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய்
நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம்.
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார்
என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது.
சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ
ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும்
நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும்.
பெய்துகொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது.
பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது
மாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

 " ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து" என்றார்.

அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ "சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு" எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும்,
உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும்,
யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

கோட்டோவியங்களாக
ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:

1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு 'அபர்ணா' என்றொரு நாமம்.
  வழக்கமாக இந்த நாமத்திற்கு ' கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்' என்றுபொருள் கொள்வர்.
  ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, " தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்" என்று அற்புத விளக்கம் அளித்தார்.

2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது
  சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் "சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)" என்றெழுதிய ஓலையில்
  பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில் " அஸ்தி த்ரோணம் அதஃபரம்" என்றெழுதி கையொப்பம்
  இட்டார். "சிவம்" என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் 'ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி
  அதை விட 'த்ரோணம்' என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

  ஸ்ரீமஹாஸ்வாமிகள் " சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்
  படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப்
  பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
  சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், "த்ரோணம்" என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.
    " சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை" என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் " அதற்கு மேலே வில்வம் இருக்கிறது" என்று பொருள்படத்தான்
  மாற்றுரைதிருப்பார்"  என்று விளக்கி உள்ளார்.

மஹான்கள் பார்வையே தனி.

அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.




  " பவ சங்கர தேசிக மேசரணம்! "

Labels: