SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Sunday, October 18, 2015

Su.Ra PP PHOTO


Thursday, August 28, 2014

அழகுவேலன் விருத்தம்

 அழகுவேலன் விருத்தம்

மங்காப் புகழுடையோன் மன்னுமயில் ஏறிடுவான்

சிங்கார வேலவனின் சீருரைக்க- எங்கோவாம்

கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்

காத்தாண்டு கொள்ளக் கடன்.

பார்தன்னில் சீர்தங்கும் ஊரெங்கள் ஊர்தன்னில்

      பாலனாய்த் திகழ்ந்திருப்போய்!

   பால்சிந்தும் முகமோடு வேல்கொண்ட கரமோடு

      பக்தரைக் காத்து நிற்போய்!

தார்சூடும் மறலியைத் தன் தொண்டனுக்காகத்

      தாளெற்று தேவனவனும்

   தாழ்சடை தான்புரள ஆழ்கங்கையும் அசைய

       தன் தலை தாழ்த்திநிற்க

கார்வண்ணன் உந்தியிற் றானின்ற நான்முகன்

       கைகட்டிச் சிறையிருக்க

    வேதங்கள் நான்குக்கும் ஆதாரஒலியினை

       விளக்கிடும் தேவதேவா!

நீர்வளம், நிலவளம், சோர்விலா மனவளம்

      நிறைந்திடும் தேவபுரியாம்

  பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

       பொலியு சிங்காரவேலே!                           (1)

எந்தனுளம் தன்னிலே சொந்தமும் பந்தமும்

      எந்நாளும் எண்ணிவிட்டேன்

   சிற்றின்ப உலகிலே மற்றின்பம் ஒன்றையே

       சிந்தையிற் கொண்டுவிட்டேன்

உந்தனடி பற்றிவரும் சந்தமிகு வாழ்வினை

       உணரா திருந்துவிட்டேன்

   உழலுமாம் மனதிலே அழுகையை அன்றிவே

       றொன்றையும் இன்றுகாணேன்

கந்தனே வள்ளிக்கு கந்திடும் காந்தனே

     கதறினேன், காத்தருள்வாய்!

   கடைசியில் காட்டினை அடைகின்ற போதிலே

      கண்விழித் தேனருள்வாய்!

செந்தமிழ் தன்னிலே விந்தைபல செய்திடும்

       பாவலர் நிறைந்தபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

        பொலியு சிங்காரவேலே!                           (2)

முக்திக்கு வழிதரும் பக்திக்கு வித்திட்டு

     வாழுமோர் வாழ்வுமறியேன்

  முன்வினைப் பயனிங்கு என்வினை மோதிடும்

     பின்வினை தன்னையறியேன்!

சக்தியை முத்திட்டு சரவணப் பொய்கையில்

       சதிராடு கந்தவேளே

   சற்றேனும் என்மனதை வற்றாத கருணையால்

       சரவணப் பொய்கையாக்கு

மெத்தக்க றுத்தவள்கு றத்திக்கு மாலையிடும்

      மேலானச் வேலவா என்

    சித்தத்தி னில்என்றும் சித்திரம் போல்நின்ற

        சிறுவனே, கார்த்திகேயா

தித்திக்கும் முத்தமிழும் எத்திக்கும் தான்பரவ

     வைத்த்சீர் கொண்டபுரியாம்

   பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

       பொலியு சிங்காரவேலே!                               (3)

பொறியியல் தன்னிலே அறிவினைப் பெற்றுநான்

        பட்டமும் சூடுவேனோ

    பொருந்தாத வாழ்விலே வருந்தியே வாழ்வினைப்

         பயனின்றி வாழுவேனோ

புரியாத தாகவே தெரியாது நின்றிடும்

      புத்தியும்; கற்றகல்வி

   ‘புவனத்தி லே சற்று கவனம் இருந்திடிற்

      புரியாத தேதுமில்லை

அறிவாய்’ எனப் புகலும்; எரிவாயில் வீழுமோர்

        அன்றிலின் நிலையில் நானும்

    இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலக அருளுக்கும்

        இடையிலே ஆடுகின்றேன்

மறி,சூலம் கொண்டகா பாலியைக் கற்பகம்

        மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

         பொலியு சிங்காரவேலே!                             (4)

தான்பெற்ற செல்வனைத் தாயுமொரு நாளுமே

       ஏன்பெற்றோம் என்பதில்லை

    தண்ணீரும் தன்மீது நின்றாடும் தாமரைப்

       பூவினைத் தவிர்ப்பதில்லை

வானுற்ற மதியமும் மறுவுற்ற போதிலும்

      வாஞ்சையாய் ஏற்றுவிட்டான்

   வணங்காத சூரனும் அணங்கோடு நீயேற

       வண்ணமயில் ஆகிவிட்டான்

கானுற்ற முனிவனாய்க் காவியும் சடையுமாய்த்

       தத்துவம் கண்டதில்லை

   நான்செய்த குற்றமும் தேனொத்த சொல்லினாய்

       நீயெண்ணலாகுமோ சொல்

மீனொத்த கண்ணினாள் மானேந்தும் ஐயனை

      மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மவிலை யின்வாழும் என்னரிய செல்வமே

         பொலியு சிங்காரவேலே!                                   (5)

வில்லுக் கருச்சுனன் மல்லுக்கு நிற்கையில்

      வீசிடும் சாட்டைகொண்டு

  பாதையைக் காட்டவே கீதையைச் சொல்லிடும்

       பரமனின் செல்வமருகா!

சொல்லுக் ககத்தியன் கேட்கமுத் தமிழினைத்

      தந்திடும் வெற்றிவேலா

   குன்றத்தி லேநின்று குன்றாத அருள்பொழியும்

       குமரனே கார்த்திகேயா!

பல்லுக்கு ஆலுண்டு  சொல்லுக்கு நாலுண்டு

      பக்தர்க்கு  வேலுண்டுகாண்!

    அஞ்சற்க! என்றுந்தன் கஞ்சக் கரங்கொண்டு

        நெஞ்சுக்கு நீயருள்தா

முல்லைப் பூ நாணிட முறுவலைக் காட்டிடும்

       முழுமுதற் கடவுளே,இப்

   பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

        பொலியு சிங்காரவேலே!                          (6)

முருகனே உன்னிடம் நெருங்கியே ஓரடி

     உன்னன்பர் வந்துவிட்டால்

  முன்னின்று வந்துநீ இன்னருள் தந்திடும்

     தன்மையோன் என்றுரைப்பார்

உருகிடும் உள்ளமும், பெருகியே வெள்ளமாய்

      ஓடுமென் விழியின் நீரும்

   உந்தன் உளத்திலே கந்தனே உண்மையாய்

      உறைக்கவே இல்லையோ சொல்!

இரும்பினால் ஆனதோ, இறுகிடும் பாறையால்

       ஆனதோ உந்தனுள்ளம்?

   இங்குநான் பட்டிடும் இன்னலும் அங்குனக்(கு)

       இன்பமாய் ஆகுமோசொல்!

வருமலை மோதிடும் கரையினில் விளையாடும்

     வலைஞர்கள் வாழுமூராம்

   பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

       பொலியு சிங்காரவேலே!                            (7)

பன்னிருகை வேலனே, பரமனவன் பாலனே,

      பழகுதமிழ்ச் சீலனே என்

   பழவினைகள் யாவையும் அழகொழுகு தேவனே

       பார்த்துநீ தீர்த்தருள்வாய்

என்னிருகை கூப்பியே உன்னருளை வேண்டினேன்

       எழிலரச னேயருள்வாய்!

   எப்பொருளும் எண்ணாது மெய்ப்பொருள் உன்னையே

       ஏத்துகின் றேனிறைவா!

சின்னக் குழந்தையாய் சீரான நடையிட்டு

         சிரித்துநீ ஓடிவாராய்

    மங்கிடும் மாலையில் எங்குமிருள் சூழ்கையில்

        மயக்கியே அன்புதாராய்!

சென்னையாம் நகரிலே அன்னையும், பின்னையும்

         சேர்ந்தருள் செய்தபுரியாம்

   பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

         பொலியு சிங்காரவேலே!                             (8)

Labels:

Gopulu CHARACTER Sketches



Gopulu a phenomenon in tamil art world is my Adharsam. I am ever inspired by his immortal creations.
In his illustration for Devan's Mister Vedantam, his sketch of ParthaSarathi PerumAL of Triplicane can be mistaken for Amarar Silpi's work. Had Gopulu attempted it seriously we would have had another Raviverma. Here I have attempted to capture the caricatures  he drew in Anadha vi kadan magazine
Illustrating the Character sketches written by Sri.SAVI.

SU.RAVI

Labels:

Wednesday, January 22, 2014

என் சமீபத்து எண்ணெய் வண்ண ஓவியஙள்


இவை என் சமீபத்திய எண்ணெய்வண்ண ஓவியங்கள்.

3' க்கு 2' அளவில் ஆயில் பெயிண்டிங் பேப்பரில் வரையப் பட்டவை.






சு.ரவி




Labels:

Wednesday, April 03, 2013

மறுபடியும் சில்பி தாசனாக...

மறுபடியும் சில்பி...

இம்முறை மார்ச் மாதம் சென்னை சென்றிருந்தபோது அண்ணா எனக்கு ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் "தென்னாட்டுச் செல்வங்கள்" என்ற சில்பியின் ஓவியத் தொகுப்புகளை வாங்கிக் கொடுத்தான்.அந்தக் கருவூலம் அன்று முதல் என்னை ஆட்கொண்டது.  இது முதல் பதிவே..
இன்னும் வரும்.

1. அழகர் கோயிலில் உள்ள நரசிம்மர் சிற்பம்
2.தாடிக்கொம்பு( தென்காசி) கருட வாஹனர்
3.அழகர்கோயில் லக்‌ஷ்மி வராஹர்
4.பட்டீஸ்வரம் துர்க்கை-இடதுபுறங்கையில் கிளியோடு,அடியவரைக் காக்க
   இடது பாதத்தை முன்வைத்து வரும் அம்பாள்
5.திருவெள்ளறை புண்டரீகாக்‌ஷ்ப் பெருமாள் உற்சவர்
6.சுசீந்திரம் உலகளந்த பெருமாள்\
7.தஞ்சைப் பெரியகோயில் பிக்‌ஷாடனர்
8.திருப்பூந்துருத்தி வீணா தக்‌ஷிணாமூர்த்தி
9.தென்காசி வேணுகோபாலஸ்வாமி
10.திருப்பூந்துருத்தி அழகார்ந்த அம்மை

சு.ரவி
3 ஏப்ரல் 2013










Tuesday, September 25, 2012

GarbaRakshaambikai Thirukkarukaavuur


திருக்கரு காவூர்த் தாயே!

தருப்பையை ஏந்தும் முனியின்
     தகித்திடும் சாபம் வந்து
கருப்பையைத் தாக்கும் நேரம்
     கதறிய வேதிகைக்குக்
கருவினைக் காத்துத் தந்த
     கருணையே! முல்லைப் பூக்கள்
அரும்பிடும் கருகா வூரின்
     அன்னையே, அழகே, போற்றி!

இல்லறம் பேணிக் காத்தும்
     இன்னமும் மழலைச் செல்வம்
இல்லைஎன் றேங்குவோர்தம்
     இதயதா பத்தைப் போக்கி
நல்லதோர் பிள்ளைச் செலவம்
     நல்கிடும் தாயே! வாச
முல்லைசூழ் கருகா வூரின்
     முழுமுதற்பொருளே, போற்றி!

தாயவள் கருவில் ஜீவன்
     தரிக்கின்ற நேரம் தொட்டு
சேயினைக் கர்ப்பத் திற்குள்
     செவ்வனே புரந்தச் சேய்க்கும்
வாயுவும், உணவும் தந்து
      வாழவைப் பாயே, தாயே!
வாயவிழ் முல்லைக் காட்டின்
     வண்ணமே, பாதம் போற்றி!

சந்ததம் உந்தன் பாதம்
    சரணமென் றடைவோர் வாழ்வில்
சந்ததி தழைக்கச் செய்வாய்!
    சத்கதி அமையச் செய்வாய்!
சந்தனத் தென்றல் சூழும்
    சந்தமே!  தாய்மைப் பேறே!
வந்தனை செய்தோம் முல்லை
     வனத்துறை வாழ்வே, போற்றி!

விரிதரும் வானம், ஆங்கே
    விளங்கிடும் கோள்கள், மீன்கள்
எரிதழல் என்னச் சுற்றும்
    எண்ணரும் தீக்கோளங்கள்
திரிதரும் அண்டம் யாவும்
    தேவியுன் கருவே அன்றோ?
திரிபுர  சுந்தரீ!  என்'
   திருக்கரு காவூர்த் தாயே!


சு.ரவி

22/09/2012

Labels:

Friday, August 17, 2012

ஐயப்பன் கீர்த்தனைகள் பகுதி 2

நண்பர் நாராயணனின் குரலில் மேலும் சில ஐயப்பன் கீர்த்தனைகளைக்
கீழ்வரும் வலைத்தள இணைப்பில் கேட்டு ரசிக்கலாம்.

http://archive.org/details/IyyappanKiirththanaiVol2
 
3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:


1.         நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

      நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.
      எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட
      க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

           ( இது போன இணைப்பின் இறுதிப் பாடல். பாடலின் பிற்பகுதி இங்கே ஒலிக்கிறது)

2.         சபரிமலையின் ஐயனே உனைச் சரணடைந்தேன் மெய்யனே-  மாயாமாளவகௌள ராகம்.

            1985 டிசம்பர் மாதம். மனைவி, 5 வயதுப் பெண்குழந்தை சென்னையிலிருக்க, தனியே கல்கத்தா வாசம்.
      மலைக்குச் செல்ல விரதம். மாலை பணிமுடிந்து, ஹூக்ளி நதியில் படகிலன் மேல்தளத்திலமர்ந்து
      வீடுதிரும்பும் நேரம்.சுமார் 8 டிகிரி குளிர். மனைவி, மக்கள் என்று பாசத்திலும், நேசத்திலும் மனம் மயங்கிய
      தருணம். அந்த mystic சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்ப, மாயாமாளவகௌள ராகத்தில் பிறந்த
      பாடல்.

3.        பொன்னம்பலம் அது எங்கள் மனம்- ஹிந்தோளம் ராகம்.

           "நேரார்  தமக்கு    நெருப்பென    நிற்கும் நிமலநின்தன்
      தாரார்  தடந்தோள் தரிசிக்க வேண்டித் தவிக்குமன்பர்க்(கு)
      ஓரோர் கணமும் ஒருயுக     மாக     வளர்ந்துவெய்யோன்
      தேரார்ந்த அச்சு  முறிந்ததே  போலத்    தெரிகின்றதே!

      என்று எழுந்த விருத்தத்திற்கு contrast ஆக, 
            " ஐயனைத்  தரிசிக்கும் கணம் ஒரு யுகமாக நிலைக்கும் படி இந்த உலகம் உருளாமல் உடனே உறையட்டும்
       என்ற பிரார்த்தனையோடு பிறந்த பாடல்.

4.        வாள்வாங்கி வீற்றிருக்கும் வாழ்வே - கரஹரப்ரியா ராகம்

     மிகுந்த பிரயாசைகளுக்குப் பின் கிடைத்த அச்சங்கோவில் தரிசனம்.
     ஐயன் கையில் வாளேந்தி அரசகோலத்தில் வீற்றிருக்கும் காட்சி.
     முழுக் களபச் சாத்து- சந்தனக் காப்பு- கருணைபொழியும் கருவிழிகள் திறந்து, சிவப்பு நிறத்தில் உதடுகள் எழுதி
     அழகுமேனியனாக எதிரே ஒளிர்ந்த வீரத்திருமேனி கண்டு கரஹரப்ரியாவில், சரணத்தில் ராகமுத்திரையோடு
     பிறந்த பாடல்.

5.      உன்னைத்தான் சரணமென்று - தோடி ராகம்

    போன இணைப்பில் எழுதியபடி, பூர்விகல்யாணியைத் தொடர்ந்து, அதே வருடம் பயணத்தின் போது, நண்பன்
    நாராயணன் ஆலாபனை செய்ய, பெருவழியில் பிறந்த இரண்டாவது கீர்த்தனை. இதிலும் பல்லவி, அநுபல்லவி,
    மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், 'குருதாஸ' எனற முத்திரையும்,
    பல்லவியில் சூசித ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

6.     சபரி எங்கள் தாயகம் - ஜோன்புரி ராகம்

    நண்பர் நாராயணனின் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களும், பிருகாக்களும் கொடுத்த உந்துதல்தான்
    ஜோன்புரியில் பிறந்த இந்தப்பாடல். பாடலை முழுமையாகப் பாடுகையில் ஒவ்வொரு
    சரணத்திற்கும் இடையில் ஒரு சரண விளி இருந்தால் இன்னும் நிறைவாக இருக்குமே என்று
    கருதி, இவ்விணைப்புகள் சேர்க்கப் பட்டன.

7.    விழிவேண்டல் விருத்தம் - கேதாரகௌள + தன்யாசி ராகங்கள்
   விழிவேண்டல் பதிகம்- ராகமாலிகை

      1987 ஆம் வருடம். எங்கள் பெரியகுருஸ்வாமி ( தற்போதைய குருவின் தந்தையார்)
   அமரர் திரு. ராமச்சந்திரன் குருஸ்வாமி அவர்கள் விழிப்பார்வை குன்றி சிகிச்சை
   பெற்ற போது ஐயப்பனை வேண்டிப் பாடிய விருத்தமும் பதிகமும். நண்பன்
   நாராயணனின் ராகஞானத்திற்கு இந்த ராகமாலிகை ஒரு பெரும் சான்று.

8. ஓடும் என்மனம் ஒடுங்காதா- தேவகாந்தாரி ராகம்

  இந்தப் பாடலின் பல்லவி முதலில் ஸஹானா ராகத்தில்தான் என்னுள் பிறந்தது.
 ஆனால், நண்பன் நாராயணன் இதை தேவகாந்தாரியில் முயற்சி செய்தபோது அது இன்னும்
 அழகாகப் பொருந்தி ஒலித்தது. பெங்களூர் ராஜா ஐயங்காரின் "க்‌ஷீர ஸாகர சயனா" கேட்ட்
  நினைவுப் பதிவு இந்தப் பாடலின் அமைப்புக்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.

9. அடியவர் மனமென்னும் ஊஞ்சலிலே ஆட- குறிஞ்சி

    ஒருமாறுதலுக்கு, நாராயணனே எழுதி இசைத்த இந்தக் குறிஞ்சி ராகப் பாடல் ஐயப்பனை
    ஊஞ்சலில் அமர்த்தி, ஆடவைத்து லாலி பாடி அழகுபார்க்கிறது.

10.   ஆரத்திப் பாடல் 

 ஸாயி ஆரத்திப் பாடல் கேட்ட பாதிப்பில், ஐயப்பனுக்கு எழுதிய ஆரத்திப் பாடல்


கேட்க, ரசிக்க….


சு.ரவி

ஐயப்பன் கீர்த்தனைகள் பகுதி 1

என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு
என்நண்பன் V.K  நாராயணனையே சாரும்.

1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த
இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன்
நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal


3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:
   
  பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.
  ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்
  நாராயணன் ஆரம்பித்த  பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.
  சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின்
  தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் 'கமாஸ்' கிட்டாவையர் சொல்லும் dialog.

2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

   சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்
   வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.
   பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர
   பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

3.'உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

  மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம்.  சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப்                           போய்க்கொண்டிருந்தோம்.  நள்ளிரவு.  பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.
பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் " என்ன, சு.ர. தூங்கிட்டியா" என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.
சரணத்தில் 'நினைப் பாட' என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு
அமையப்பெற்றபாடல்.
  
4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

   1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி  தொலைபேசியில் அழைத்தான்.
" சு.ர, 'அமரத்வனி- 2'  கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது.  9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா"
அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.
 பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் " பூதமைந்தும்" என்ற பாடலை அளித்தேன்.
கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

  கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்
    சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்
    கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், 'குருதாஸ' எனற
    முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

   தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி " பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்"
   என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும்
   உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

7.  அஹங்காரத்திரை அறுபடுமோ-  சுப பந்துவராளி ராகம்

     மஹனீயர் தியாகைய்யரின் 'தெரதீயகராதா' கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.
     சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்
          " அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்"-
      அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் - இங்கே யமனும் தங்க விடமாட்டான்"  என்கிற யதார்த்த உண்மை.

     நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் 'ஸ்ரீ சத்ய நாராயணம்:" வழி…

8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

     பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை.  'ரஞசனி', நாராயணனுக்கு மிகவும்
     நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

9.  தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

     அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.
     (T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவது
     மகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் - இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின்
     மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன்
     இன்று மறைந்துவிட்டான்).

     எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட,
     சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

          ( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் 'ஹரிவராஸனம்'   HUM  செய்ய, அதே மெட்டில்
             "விரியும் வானெலாம்'   பாடல் பிறந்தது வேறு அனுபவம்)


10.  நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

      நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.
      எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட
      க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

           ( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்
             C.D.யில் கேட்கலாம்)


கேட்க, ரஸிக்க….


சு.ரவி   

விடையேறும் எங்கள் பரமன்













சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்
கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும் பிரியான்   
தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்
கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்
இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்
துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம் பிரியான்
புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்
விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்
முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம் பிரியான்
பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்
லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்
கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

சு.ரவி

Labels:

Saturday, June 30, 2012

அம்மா


அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், 'கண் பார்த்தால் கைசெய்யும்' என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்- ஓர் அபூர்வக் கலவை அம்மா!.
பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ 'குறைவொன்றும் இல்லை கோவிந்தா' தான்!  
தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக
அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.
உழைப்புக்கு அஞ்சாத அம்மா!
தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து- தன் நேரத்தை வீணாக்காத அம்மா!
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை சுமதி (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த செயல்வீராங்கனை அம்மா!
எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா! மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின்
முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!
வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, இந்திராநகரில் ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!
1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனர் திரு.முத்தையனைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!
1973 ஆம் வருடம்பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது,
எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!
தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத் அம்மா! 
தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!
நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப் பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!
கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸ்ர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!  
நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
"Don’t Touch me; self Help is the Best Help"என்று சொல்லி அசத்திய அம்மா!
"என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!
அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!
அம்மா,
சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள்
வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-
இன்றைக்கு….?

Labels: